பத்திரிக்கையாளர்கள் மீதான தமிழக அரசின் அடக்குமுறைக்கு தமிழ்ச் செய்திவாசிப்பாளர்கள் சங்கம் கடும் கண்டனம்!

 

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டதால் ஆட்சியர் அலுவலகம் எதிரே குழந்தைகளுடன் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து உயிரிழந்தனர். இரண்டு குழந்தைகளும் தீயில் கருகியதை பார்த்து தமிழக மக்கள் கொந்தளித்தனர். இந்த நிகழ்வு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மக்களின் கோபம் மற்றும் உணர்வை வெளிப்படுத்தும் வகையில், இந்த கந்துவட்டி கொடுமைக்கு நடவடிக்கை எடுக்காத அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டார். பாலாவின் கைதுக்கு பத்திரிக்கைத் துறையினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசை விமர்சித்து பாலா வரைந்த கார்ட்டூன் தேசிய அளவில் செய்தியானது. இதையடுத்து, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பாலாவிற்கு ஆதரவாகவும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான அரசைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின்போது, பதாகைகளில் சர்ச்சைக்குரிய கார்ட்டூன் பயன்படுத்தியதாக கூறி, கார்ட்டூனிஸ்ட் பாலா, மற்றும் சென்னை பத்திரிக்கையாளர் மன்ற (CHENNAI PRESS CLUB) நிர்வாகிகள் பாரதி தமிழன், அசதுல்லா ஆகியோர் மீது திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும், தமிழக காவல்துறையின் அடக்குமுறை அதிகரித்துக் கொண்டே செல்வதை தமிழ்ச் செய்திவாசிப்பாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக வழக்கை திரும்பப்பெறவேண்டும் என வலியுறுத்துகிறது

 

– தமிழ்ச்செய்திவாசிப்பாளர்கள் சங்கம்